உதிரத்து_உறையும்_உணர்வுகள்-தொடர் _2

 

writing, nagaa, novels, book

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

காதலின் வேதனையைக் காவியமாக்கும் இருவேறு காலச்சூழலில் குழலியும் எழிலியும் 

இணைந்து மிரட்ட வருகிறார்கள்

#உதிரத்து உறையும் உணர்வுகளாக..


வாருங்கள் அவர்கள் காதலுக்கு கரம் கொடுப்போம்.

காதல் சேருமா ? பிரியுமா ?

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕


        #உதிரத்து_உறையும்_உணர்வுகள்


                            தொடர் _2


              


களிறென் றொத்தஅ வன்தோள்கள் கடிதென்ப தாகிட

வளியொத்த வள்ளலா மவன்செய் கையுயரத்

தென்னன் புகழுயர வில்வாள் மற்போர் திறனுயரத் திண்மையான் 

தோற்றம் விரிசுட ரொப்பவு மொளிரக்

கேண்மை கொட்பின்றிச் செயற் கரியன் சேர்புகழ வாழியவே.


விரிமார்பன் வியன்மாறன் அச்சம் அறிஇல் ஆதவன் போலுச்சம் பெற்றவன்

பொழுதிற் வெற்றி யொன்றே யறிந்தவன் வேல்படை முட்கோ புரமாயினும்

வேங்கையாய்த் தாவி வெஞ்சினம் அறுத்துய்து வேழமாய் நின்றான் 

வெற்றி மாறன்.


****

        வெற்றிமாறனைக் காண ஓலையோடு வந்தான் அமைச்சன் சாண்டில்யன்.


             "அரசே எதிரி நாட்டு மன்னர் கஜமுகன் தங்களுக்கு ஓலை அனுப்பி இருக்கிறார்"


"ஓலையைப் படி சாண்டில்யா "


"மன்னர் பெருமானுக்கு வணக்கம்"


         ' எட்டுத் தேசத்தையும் வென்றும் இறுமாப்பு கொள்ளாது அனைவரையும் அணைத்துயர்ந்த அரணே"


  "தங்கள் வீரம் கண்டு வியந்தோம்.தங்களோடு போர் புரிந்து யாமும் பெருமை கொண்டோம், ஆயினும் தங்களோடு மோதி எம்மக்களைப் பலியிட விரும்பவில்லை அது களிரோடு பரி மோதுதல் போலாகும் ஆகையால் எமது அரசை யாமே தங்களுக்கு வழங்க முடிவு செய்தோம் ."


"தாங்கள் படையெடுப்பை நிறுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டும் இனி இந்த அரசு தங்களுக்கே சொந்தம்"


இப்படிக்கு

மக்கள் நலம் விரும்பும் 

கஜமுகன்.


"சாண்டில்யா ஒரு ஓலை தயார் செய்

அதில் அவர் நாடு அவருக்கு என எழுதி அனுப்பு."


"என்ன சொல்கிறீர்கள் மன்னா ?"


"ஆம் அவ்வாறே செய்"


"நாம் படையெடுத்த நாட்டை இதுவரை சொந்தமாக்காமல் விட்டதில்லையே

மேலும் அவராகவே தரும்போது ஏற்காமல் வேண்டாம் என்கிறீர்களே "


"சாண்டில்யா சிங்கம் பசியோடு இருந்தாலும் பிணத்தை உண்ணாது அடித்தே உண்ணும் .அஃதே மன்னரின் மாண்பும் தாமாகச் சரணடைந்தவரின் நாட்டைப் பிடுங்குதல் நமக்கு சிறப்பும் ஆகாது."


"அதற்காக..மன்னா"


"அதோடு மட்டுமல்லாமல் கஜமுகன் பணிந்து போகிறவனும் அல்ல.அவனே தாமாக முன்வருகிறான் என்றால் மக்களின் நலனை நாடுகிறான் என்பது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது."


"அவனது நாட்டை அவனுக்கு என்று அறிவிக்கும் பட்சத்தில் அவனது பகை உணர்வு குறைந்து நட்பும் பாராட்டுவான்."


"நமது வெற்றி அடிபணிய வைப்பதே அதற்கு ஆயுதம் அன்பாக இருக்கட்டுமே."


"விசித்திரமாக இருக்கிறது மன்னா உமது இச்செயல் ."


"இத்தனை ஆண்டுகள் என்னோட இருந்தும் புரியவில்லையா நண்பா "


"நாம் எப்போது அரியாகவே இருக்கவேண்டும் அதுவே நமக்குப் பெருமை"


"நீங்கள் எதைச் செய்தாலும் காரணமிருக்கும் நான் ஓலை அனுப்பி விடுகிறேன் மன்னா "


"அப்படியே ஆகட்டும்."


"அது சரி நேற்று ஏன் என்னைக் காண வரவில்லை ."


"மன்னிக்கவும் மன்னா சொல்ல வேண்டும் தான் அதற்குள் இந்த ஓலைச் செய்தி மறக்கச் செய்துவிட்டது."


"பார்த்து சாண்டில்யா என்னையும் மறந்துவிடாதே"


"ஐயோ என்ன இது மன்னா இப்படி சொல்லிவிட்டீர் உடல் பிரிந்த நிழல் உயிராகுமோ அது இருந்தவிடம் தெரிந்தும் உயர்வாகுமோ"என்றான் சாண்டில்யன்


"சரி சரி ஏனிந்த பதட்டம் .? உன்னைக் காணாது நேற்று பொழுதே போகவில்லை ."


"எனது மாமன் மகள் சுந்தரியை மணம் முடிக்க எனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர் அதனால் அவளைப் பார்த்துவரப் போயிருந்தோம் "


"ஓ மன்னருக்கு எதற்காக இந்நற்செய்தி சொல்ல வேண்டும் என்று நினைத்தாயோ ?"


"அப்படி இல்லை மன்னா நான் அவளைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது அவளைப் பார்த்து பிடிக்கும் பட்சத்தில் சொல்லலாம் என்று நினைத்தேன்"


"பெண்பார்க்க மன்னன் வந்தால் ஏற்க மாட்டார்களோ ?"


"தங்கள் வருகை எங்கள் பாக்கியம்

இருந்தும் மாமன்னரை வரவேற்று அமர வைக்க இடம் வேண்டுமே."


"மன்னர் ஆயினும் இருக்கும் இடம் இரண்டு அடி தானே அதற்குமா வேண்டும்  அத்தனை ஆடம்பரம்."


"இல்லை மன்னா உங்கள் அன்பு அறிவேன் ஆயினும்"


"சரி சரி விட்டுப்போய்விட்டாய்... திருமண நாளுக்காவது சொல்வாயா ?"


"பிழை நேர்ந்ததால் என்னை இப்படியாய்க் கேலி செய்யாதீர் தாங்களின்றி எப்படி நடக்குமென் திருமணம் ."


"நீ எனது அமைச்சன் மட்டுமல்ல என் தோழனுமாவாய் ஞாபகமிருக்கட்டும்"


"அறிவேன் மன்னா ."


"சரி சரி பெண் எப்படி இருக்கிறாள் .?"


"நேற்று மலர்ந்த மல்லிகைபோல் இருக்கிறாள் "


"எனது தங்கையல்லவா அப்படித்தானிருப்பாள்."


"மன்னா ....."


"ஆம் நீ மணக்கப்போகிறவள் எனது உடன்பிறந்தாள் அவளுக்கு இந்த அண்ணனின் சீர்தான் அவையை அலங்கரிக்கும் ."


சாண்டில்யன் மன்னரின் காலில் விழப்போனான்


"சாண்டில்யா என்ன இது ?  நீ என் உயிர் நண்பன்" என கட்டியணைத்தான்


நெகிழ்ச்சி மிகுதியால் சாண்டில்யன் கண்களில் நீர்சுரந்தது.


"சரி மன்னா நீங்கள் எப்போது மணம் முடிப்பதாய் உத்தேசம் ?"


இப்படி சாண்டில்யன் கேட்டதும் வெற்றிமாறனின் முகம் மலரத் தொடங்கியது.


"மன்னா உங்கள் முகத்தில் ஒரு ஒளி படருகிறதே மகாராணியாரைக் கண்டுவிட்டீரோ ?"


வெற்றிமாறன் அமைதியாய் இருக்க..


"அப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது

இருக்கட்டும் இருக்கட்டும்."


"கண்முன்னே வாராத கனிகையவள் என்னுள்ளம் புகுந்தாள் சாண்டில்யா

அவள் யாரென்றறியேன்"


"கண்டீரா எங்கே கண்டீர்..."


"பூ விரிந்த  சோலைதனில் பூவாய் அவள் பூப்பறித்தாள் பூவினது கரங்கண்டேன் புன்னகையை மலரவைத்த பூவிதழ் கண்டேன்

ஆற்றினில் துள்ளுகின்ற இருகயல் கண்டேன்"


"அப்புறம் ?"


"அப்புறமென்ன ,கனவு கலைந்தது "


"கனவு கலைந்ததா? என்ன மன்னா சொல்கிறீர்கள் ?"


"ஆம் அவளை இருமுறை கனவில்தான் கண்டேன் அவள் எனக்கானவளாகத் தோன்றுகிறாள்"


"எந்த தேசத்தில் இருந்தாலும் நான் கண்டறிந்து தருவேன் மன்னா .கவலையை விடுங்கள்

உங்கள் கனவு நாயகியைக் கரம்பிடிக்கக் காத்திருங்கள் "என்றான் சாண்டில்யன்


"அவள் கண்டு, சம்மதம் கொண்டு, காதல்செய்து ,மணம் புரிய ஆசை எனக்கு."


"நடவும் மன்னா நான் சொல்கிறேன்

நிச்சயமாக அவர் வருவார் உமக்காக‌."


"இறைவன் சித்தம்.சரி இன்று நாம் ஒரு இடத்திற்குச் செல்லவேண்டும் என்று கூறியிருந்தேனே ஞாபகமிருக்கிறதா ?"


"இருக்கிறது மன்னா .எப்படி மறக்க முடியும்.எல்லா ஏற்பாடுகளும் தயார் தங்கள் கட்டளைக்காகவே காத்திருக்கிறேன்."


"சரி வா போகலாம் "என்றான் வெற்றிமாறன்


இருவரும் குதிரையில் ஏறிச் புறப்பட்டார்கள்.


தொடரும் ....இளவரசனின் பயணம்


எழுத்தாளர் நாகா


💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Comments