உதிரத்து_உறையும்_உணர்வுகள் - தொடர் _1

 

naaga, novels, books, poets

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

காதலின் வேதனையைக் காவியமாக்கும் இருவேறு காலச்சூழலில் குழலியும் எழிலியும் 

இணைந்து மிரட்ட வருகிறார்கள்

#உதிரத்து உறையும் உணர்வுகளாக..


வாருங்கள் அவர்கள் காதலுக்கு கரம் கொடுப்போம்.

காதல் சேருமா ? பிரியுமா ?

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕


        #உதிரத்து_உறையும்_உணர்வுகள்


                            தொடர் _1


              "மதிற்போல் நிமிர்ந்து மனைவளம் காக்கும்

அதிற்சிறப்பில் ஆங்கோர் குலத்தின் புயத்தால்

விதிதனை உடைத்தெ ழுந்திடும் புயலாள்

மதியுடை நங்கை மாண்புடை கிழத்தி

முகிலுடை தரித்த முல்லைக் கொடியவள்

தன்தோள் வடியத் தண்ணீர் புகுந்து தணலும் தவிர்த்தெழ நின்றாள் தாடகைமீதே

அவள் பெயர் முகிலெழிலி."


"முத்துதிரும் போலவள் மென்மேனி தழுவிச்

சிந்தும் செவ்விளநீர் பட்டுதிர பார்ப்போர் கண்விரியும் 

காவிரிநீர் பெருகும்

குழைத்தசந் தனமெங் குலவும்

குழலி 

குவித்த இதழ்விரியும் இதம்கனியும் இருளகலும் இனியாள்

 இனிவருவின் இருப்போர் மனங்கவிழும் மண்ணில்

 மலர்ந்தவள் நடவத் தடம்பெயரும் இடங்கால் நகரின்

இடம்பெயரும் இதய மினி."


                    💕💕💕💕💕


  "என்னடி அப்படி பார்க்கிறாய் காணாத எதையோ கண்டதுபோல்" எனத் தன் தோழி மங்கையிடம் மென்னிதழ் விரியக் கேட்டாள் .


"இளவரசி இளங்காலைச் சூரியனோ இத்தரை வரும்போழ்து மாணிக்கக்கல் பட்டுச் சிதறும் பேரொளியாய் நங்கையுன் வதனம் எனை மெய்மறக்கச் செய்துவிட்டது "என்றாள் மங்கை


"ஹாஹாஹா ஆடவனாய் பிறக்க வேண்டியவள் ஐயோ பாவம் என் தோழியாய் ஆகிவிட்டாய் என் செய்வேன் கண்ணே"  என்று அந்த ஈர உடையோடு மங்கையைக் கட்டித்தழுவ..


"போதும் உங்கள் விளையாட்டு இளவரசி விடுங்கள் என்னை .

மன்னர் மகளைக் காண வருவதாகச் செய்தி கொண்டு வந்தேன்"


"வந்தாய் நின்றாய் எதையோ கண்டாய்

மையல் கொண்டாய் பெண்ணே என் மனம் கவர்ந்தாய் வா தழுவிக்கொள்" என்று மீண்டும் மங்கையை அணைக்க முயல..


"ஐயோ என்னவாயிற்று என் இளவரசிக்கு இப்படி உளறி வைக்கிறார்."


"போதையடி பெண்ணே உன் இதழ் தீண்டி இன்புற வேண்டும் அருகில் வா" என்று மங்கையின் கரம்பற்ற ..


"இளவரசியாருக்கு மணம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது உடனே அரசருக்கு தெரிவித்து விடுகிறேன்" என்று அகன்றவளை..

ஹாஹாவென மீண்டும் சிரித்து நிறுத்தினாள்.


"நில் மங்கை உன்னோடு சிறிது விளையாடலாம் என்று தான்"


"அதற்காக இப்படியா விளையாடுவது இளவரசி."


"எத்தனை முறை சொல்வேன் மங்கை நீயாவது பெயர் சொல்லி அழையென்று.மற்றவர்கள்தான் இளவரசி இளவரசி என்று அழைக்கிறார்கள் என் பெயரே மறந்து போகும் போல" ஏக்கமாய் வெளிப்பட்டது எழிலியின் குரல்


"ஐயோ இளவரசி மன்னருக்குத் தெரிந்தால் மண்ணுக்குள் போகுமென் தலை .அதற்குத் தரவேண்டும் நான் விலை வேண்டுமா அப்படியொரு கொலை."


"நன்றாகத்தானடி பேசுகிறாய் அனைவரது முன்னிலையில் சொல்லாவிட்டாலும் தனிமையில் இருக்கும்போதாவது சொல்லலாமே?"


"எப்படி இளவரசி கள்ளக் காதலைப்போலவா ?"


ஹாஹா என்று இருவரும் சிரிக்க..

சுதாரித்துக்கொண்ட மங்கை "

போதும் எழிலி நேரமாகிறது மன்னர் அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்."


"எதற்காக என்று அறிவாயா ?"


"எனக்கெப்படித்தெரியும் தந்தை மகளுக்குள் ஆயிரம் இருக்கும் ."


"சரி சரி நான் ஆடை மாற்றி வருகிறேன் "


"அப்படியே ஆகட்டும் இளவரசி "


"பார்த்தாயா மீண்டும்...?"


"உஷ் சத்தம் போடாதீர்கள் சுவருக்கும் காதுகள் உண்டு. நீங்கள் விரைந்து கிளம்பி வாருங்கள்."


"துரத்தாதே வருகிறேன் " என்று அறை உள்ளே போனாள்.


அடுத்த அரை மணி நேரத்திற்குப் பிறகு விஸ்வகர்மா செதுக்கிய பேரழகுச் சிற்பமென வந்து நின்றவளைக் கண்கொட்டாது பார்த்துகொண்டு நின்றாள் மங்கை.


"மங்கை மங்கை என்னவாயிற்று ஏன் சிலை போல் நிற்கின்றாய்?"  என்று தோளைத்தட்டி உலுக்க...


"இளவரசி ..."


"என்னவாயிற்று ?"


"உண்மையாகவே நீங்கள் தேவதை தான்" என்றாள்.


"போதுமடி விட்டால் கடவுள் என்று சொல்லி என்னைக் கல்லாகிவிடுவாய் வா போகலாம்"


அவளையே பார்த்தபடி நடந்தவள் முன்னால் நிற்கும் சுவரில் போய் முட்ட 

ஹாஹா என்று சிரித்தாள் எழிலி.


தலையைத் தடவியபடி அவள் பின்னால் நடந்தால் மங்கை.


********


          குழலி குழலி என்று தட்டியெழுப்பக்

கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்தவள்


"எதுக்கு பாட்டி இப்படி கத்தி எழுப்புற ?"


"அடியேய்  இப்ப நேரம் என்ன ஆகுது 

பெரிய மகாராணி மாதிரி தூங்குற ?"


"போ பாட்டி நல்ல கனவு நிசத்துல தான் நடக்காதுனா கனவுலயும் கெடுத்துட்டியே "


"ஆமா இவ பெரிய ஆளு போடி 

கொப்பனும் ஆத்தாளும் உன்னைப்பெத்துப்போட்டுட்டு போயிட்டாங்க."


"ஏதோ இந்த நிலந்தான் மிச்சம் உழைச்சாதான் சோறு இதுல மொட்ட வெயில்ல கனவுதான் கேடு "என்று திட்ட..


முனகியபடி சாணிக் கூடையை எடுத்துக்கொண்டு நடந்தாள் குழலி.


தொடரும் ....இளவரசியின் பயணம்


எழுத்தாளர் நாகா


💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Comments